மே.9
கோவையில் டிரோன்கள் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
கோவை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்காக தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டது. கலவர சூழல்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க இந்த டிரோன்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வானது கோவை காவல் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.
இதில், போலீசார் கலவரக்காரர்கள்போல ஒன்றுகூடி போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது, ட்ரோன் மூலம் அந்த இடத்திற்கு சென்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், இந்த ட்ரோன்கள் மூலம் கலவரம் நடக்கும் பகுதிகளுக்கு சென்று கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முடியும். ஒரே நேரத்தில் 4 கண்ணீர் புகை குண்டுகளை வீச முடிவதுடன், 2 நிமிடத்தில் மாற்றுக் கண்ணீர் புகை குண்டுகளை பொருத்திக் கொள்ள முடியும். மேலும் இந்த ட்ரோன்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கலவரம் செய்யக்கூடிய நபர்களை துல்லியமாக கண்டறிவதுடன், அவர்களை புகைப்படம் எடுக்கவும் முடியும். தப்பியோடுபவர்களைட்ரோன் மூலம் பின் தொடர்ந்து சென்று அவர்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை இதன் மூலம் எடுக்க முடியும். தமிழகத்தில் காவல்துறையில் ட்ரோன்கள் பயன்படுத்துவது கோவையில்தான் முதல்முறை என்றும் அவர் தெரிவித்தார்.