கோரமண்டல் ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 207ஆக உயர்வு – ஒடிசா விரைந்தது அமைச்சர் உதயநிதி தலைமையிலான தமிழகக்குழு

ஜூன்.3

ஒடிசா மாநிலத்தில் நேற்றிரவு நடைபெற்ற கோர ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 900ஐத் தாண்டியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாலிருநது சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பயணிகளுடன் புறப்பட்டது. நேற்று இரவு சுமார் 7 மணி வாக்கில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே அந்த ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அதேபாதையில் எதிரே வந்த சரக்கு ரயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், கோரமண்டல் ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டதில் இதுவரை பயணிகள் 207 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்தத் தகவலை ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கு வசதியாக 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2004ம் ஆண்டுக்குப் பிறகு உலக அளவில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக பதிவாகியுள்ள இந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒடிசா மாநிலம் முழுவதும் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நவீன்பட்நாயக் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒடிசா முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதோடு, மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாரா இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அடங்கிய தமிழகக் குழு, ரயில் விபத்து நடந்த ஒடிசா மாநிலத்திற்கு விரைந்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது இரங்கல் செய்தியில், “ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். மீட்புப்பணிகள் வெற்றி அடையவும், காயம் அடைந்தவர்கள் விரைவாக நலமடையவும் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து குறித்து தகவல்களை அறிந்துகொள்ள தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழக அரசு சார்பில், அவசர உதவிக்காக 044-28593990, 9445869843 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 9445869848 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும் மக்கள் தொடர்கொண்டு விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், தமிழக காவல்துறை சார்பில் 044-28447701, 044-28447703 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *