கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் சாட்சிகளை பாதுகாப்பது பெரும் சவாலாக இருந்தது – வழக்கறிஞர் ப.பா.மோகன் பேட்டி

June 02, 2023

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் சாட்சிகளை பாதுகாப்பது பெரும் சவாலாக இருந்தது என அரசு தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015 ம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல, வழக்கில் இருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல் ராஜின் தாயார் மேல்முறையீடு செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த்
வெங்கடேஷ் அமர்வில் நடைபெற்றது. யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் உள்ள குறைகளை, தவறுகளை சுட்டிக்காட்டி, தங்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் மின்னணு ஆதாரங்கள் திரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் வாதிட்டனர். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகவும் திட்டமிட்டு கோகுல்ராஜ் கொல்லப்பட்டதாகவும் அரசு தரப்பு சாட்சிகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவும் வாதிடப்பட்டது. இதனிடையே கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் மற்றும் கோகுல்ராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரயில் பாதை ஆகியவற்றை நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் கடந்த பிப்ரவரி மாதம் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்குகளில் இன்று பிற்பகல் 2:15 மணிக்கு தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பில் ” கோகுல்ராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியுள்ளதாகவும், ஏற்கனவே வழங்கிய சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஊடகங்கள் பரபரப்பாக்க கூடாது. பொறுப்புடன் செயல்பட வேண்டும், கருத்து சுதந்திரத்தின் கட்டுப்பாடு குறித்து ஊடகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

யுவராஜ் ஊடகங்களை சாதகமாக பயன்படுத்தியுள்ளார். அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என பேட்டியளித்துள்ளார். இதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். என தெரிவித்த நீதிமன்றம் யுவராஜ் மீதான தண்டனை உறுதி செய்து உத்தரவிட்டது. மேலும் 10 பேரின் ஆயுள் தண்டனையையும் உறுதி செய்தது. யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்ததாவது.. “ ஒரு அரசு தரப்பு வழக்கறிஞராக எனக்கு அரசிடமிருந்து எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை. எனது சொந்த ஊரான பவானியிலிருந்து ஈரோட்டிற்கு வழக்கில் வாதாடுவதற்கு சொந்த பணத்தில்தான் வந்து சென்றேன். மேலும் இந்த வழக்கில் சாட்சிகளை பாதுகாப்பது பெரும் சவாலாக இருந்தது. சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கியிருந்தால் சுவாதி பிறழ் சாட்சியாக மாறியிருக்கமாட்டார்.

நாடு முழுவதும் ஆணவக் கொலைகள் நடைபெற்று வருகிறது. ஆணவக் கொலைகளுக்கு எதிராக வழக்கு நடத்துவதற்கு இளம் தலைமுறை வழக்கறிஞர்கள் முன் வர வேண்டும். அவர்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும். சாட்சிகள் பொய் சொல்லலாம் ஆனால் சாட்சியங்கள் ஒரு போதும் பொய் சொல்லாது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் மட்டுமே இதுவரை சாகும் வரை சிறையில் அடைக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால் முதல் முறையாக இந்த வழக்கில்தான் விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி சம்பத் குமார் யுவராஜுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.” என அரசு வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *