கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: விசாரணை வளையத்துக்குள் சசிகலா

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது முகாம் அலுவலகமாக செயல்பட்டது கொடநாடு எஸ்டேட். அதிகார மையமாக செயல்பட்ட அந்த இடத்தில் அவர் மறைந்த பின்னர், சசிகலா சிறை சென்ற பின்னர், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது 2017ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது.

இதில், கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி காவல்துறையினர் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிமுக ஆட்சியில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை வேகமெடுக்காமல் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கின் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கூறினார்.

ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நீலகிரி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டியை விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கார் ஓட்டுநர் கனகராஜ் இறப்பதற்கு முன் ஜோதிடரை சந்தித்துள்ளார், கனகராஜை கடைசியாக சந்தித்துப் பேசிய நபர் என்ற அடிப்படையில் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த ஜோதிடரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *