‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’: வேட்டி சட்டை அணிந்து பங்கேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

May 17,2023

‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’  சிவப்புக் கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்வதாக மத்திய இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் இன்று தொடங்கியது. இந்த விழாவானது 1946 முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு நடைபெறும் 76வது ‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’ இன்று தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆவணப்படங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவை திரையிடப்படுகின்றன. இந்தியாவில் இருந்து 3 படங்கள் திரையிடப்படவுள்ளன. அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படம் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவிலும், ராகுல் ராய் நடித்த ‘ஆக்ரா’ படம் ஃபோர்ட்நைட் பிரிவிலும் மற்றும் மணிப்பூரில் 1990ஆம் ஆண்டு வெளியான ‘இஷானோ’ படம் ப்ரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவிலும் திரையிடப்படவுள்ளன. இந்த விழாவின் பிரபலமாக இருக்கும் சிவப்பு கம்பளம் நிகழ்வில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா மற்றும் மிருணால் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு சீதா ராமம் புகழ் மிருணாள் இதில் முதன்முறையாக கலந்துக்கொள்கிறார். கடந்த ஆண்டு நடந்த இவ்விழாவில் அனுராக் தாகூர் தலைமையில் ஒரு குழு நேரில் கலந்துகொண்ட நிலையில், இந்த ஆண்டு இந்தியாவின் பிரதிநிதியாக நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு கலந்து கொண்டுள்ளார். அதற்காக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், இணையமைச்சர் எல். முருகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று நடைபெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்வில், மத்திய இணையமைச்சர் எல் முருகன் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டார். அது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *