ஏப்ரல்.22
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த விவகாரத்தில், அம்மாநில முன்னாள் ஆளுநர் சத்தியபால் மாலிக்குக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டும் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக சத்தியபால் மாலிக் இருந்தபோது, அனில் அம்பானியின் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வழங்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.
ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் வழங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டதாக சத்யபால் மாலிக் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில், தற்போது சிபிஐ நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையில், சிபிஐ ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், டிரினிட்டி இன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ் நிறுவனங்களை சேர்த்துள்ளது.
இந்த இன்சூரன்ஸ் திட்டம் 3.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பலனளிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் இந்தத் திட்டத்தை சத்யபால் மாலிக் ரத்து செய்தார். இது குறித்து அப்போது பேசிய மாலிக், “இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது அரசு ஊழியர்கள் அது மோசடி திட்டம் போல் இருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். நானும் கோப்புகளை உற்று கவனித்தபோது எனக்கும் ஒப்பந்தம் தவறாக கொடுக்கப்பட்டது தெரிந்தது. அதனால் ரத்து செய்தேன்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
சிபிஐ சம்மன் குறித்து பேசியுள்ள சத்யபால் மாலிக், “இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் சிபிஐக்கு சில தகவல்கள் தேவைப்படுகிறது. அதனால், அவர்கள் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். நான் ராஜஸ்தான் செல்கிறேன். அதனால் ஏப்ரல் 27 முதல் 29 வரை ஆஜராக தேதி ஒதுக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த இருபெரும் நிகழ்வுகளான சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் புல்வாமா தாக்குதல் ஆகியவற்றின்போது அம்மாநில ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், உள்துறை அமைச்சகம் துணை ராணுவப் படையினர் ஹெலிகாப்டரில் பயணிக்க அனுமதி அளிக்காததே புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சத்தியபால் மாலிக்குக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.