காங்கிரஸ் கட்சி தேச விரோத சக்திகளுடன் கூட்டணி வைத்துள்ளது – பிரதமர் மோடி தாக்கு!

கர்நாடகாவில் பயங்கரவாத செயல்களை பரப்ப சதி திட்டம் தீட்டி, கைது செய்யப்பட்ட நபர்களை மீட்க காங்கிரஸ் முயன்று வருகிறது என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10ம் தேதி  தேர்தல் நடைபெறவுள்ளது. நாளுக்கு நாள் அனல் பறக்கும் பரப்புரையால், தலைவர்கள் வருகை மற்றும்  நட்சத்திர பேச்சாளர்கள் என கர்நாடக தேர்தல் பரப்புரை  உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகள் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் பாஜக நேற்று முன் தினம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இலவச பால், ரேஷன் கடைகளில் 5 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்படும் என அசத்தலான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.

இந்நிலையில், இன்று முத்பித்ரி நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி தேச விரோத சக்திகளுடன் கூட்டணி வைத்து உள்ளது. தேர்தலுக்கு தேச விரோத சக்திகளின் உதவியை பெறுகிறது.  தேச விரோத சக்திகள் மீது உள்ள வழக்குகளை திரும்ப பெறுகிறது. பயங்கரவாத ஆதரவாளர்களை அவர்கள் பாதுகாக்கின்றனர். கர்நாடகாவில் பயங்கரவாத செயல்களை பரப்ப சதி திட்டம் தீட்டி, கைது செய்யப்பட்ட நபர்களை மீட்க காங்கிரஸ் முயன்று வருகிறது.   இந்த ரிவர்ஸ் கியர் கட்சியானது, தேச விரோத சக்திகள் மீது உள்ள வழக்குகளை திரும்ப பெறுவது மட்டுமின்றி அவர்களை விடுவிக்கவும் செய்கிறது. இவ்வாறு கூறினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *