“கள்ளச்சாராய விற்பனையும் `திராவிட மாடல்’ அரசின் ஈடில்லா இரண்டாண்டு காலச் சாதனையா?” – சீமான் கண்டனம்!

May 15,2023

“கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்றவை போதைப்பொருட்கள் என்றால் அரசு விற்கும் மதுபானம் புனிதத் தீர்த்தமா?” – சீமான்

விழுப்புரம் மாவட்டத்தின் எக்கியார்குப்பத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்ததன் காரணமாக, உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், புதுவை, மரக்காணம், முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. மேலும் இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து அரசியல் கட்சிகள் பலவும் தி.மு.க அரசைக் கடுமையாகச் சாடின.

இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணத் தொகை வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 30-க்கும் மேற்பட்டோரில் சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 20-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தானநிலையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவரும் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். கஞ்சா, குட்காவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கள்ளச்சாராய விற்பனையும் திராவிட மாடல் அரசின் ஈடில்லா இரண்டாண்டு காலச் சாதனையா?

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவே நல்ல சாராயம் விற்பதாகக் காரணம் கூறும் தி.மு.க அரசு, கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத்தவறி, 10 உயிர்களைப் பலிகொண்டுள்ளது. தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்கெட்டுள்ளது என்பதையுமே காட்டுகிறது. அரசு விற்றால் நல்ல சாராயம்? தனியார் விற்றால் கள்ளச்சாராயமா? கண்ணுக்குமுன் 10 உயிர்கள் உடனடியாக பலியானவுடன் ஏற்பட்டுள்ள மக்களின் மனக்கொந்தளிப்புக்கு அஞ்சி உடனடி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் தி.மு.க அரசு, மெல்ல மெல்ல பல லட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டுவரும் மலிவுவிலை மதுக்கடைகளைத் தொடர்ந்து நடத்துவது ஏன்?

ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்ற தி.மு.க-வின் கடந்தகால வாக்குறுதி என்னானது? சாராய ஆலைகளை நடத்தும் தி.மு.க-வினர் தங்கள் ஆலைகளை இதுவரை மூடாதது ஏன்? கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்றவை போதைப்பொருட்கள் என்றால் அரசு விற்கும் மதுபானம் புனிதத் தீர்த்தமா? போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர், அரசு நடத்தும் மதுக்கடைகளை இதுவரை மூடாதது ஏன்?

கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்வினை விட, தி.மு.க அரசுக்கும் மதுவிற்பனையால் வரும் பல்லாயிரம் கோடி வருமானமும், அதன் மூலம் நடைபெறும் ஆட்சி அதிகாரமும்தான் முக்கியமானதா? என்ற கேள்விகளுக்கு தி.மு.க அரசு என்ன பதில் கூறப்போகிறது. மேலும், ஆளும் கட்சி என்ற அதிகாரத் திமிரில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க முயன்ற காவல்துறையினரை மிரட்டி, கள்ளச்சாராய வியாபாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தி.மு.க-வினர் தடுத்துள்ளதே 10 உயிர்கள் பலியாக முதன்மைக் காரணமாகும்.

காவல்துறையினரைத் தண்டிக்கும் விதமாகப் பணியிடமாற்றம் செய்துள்ள தி.மு.க அரசு, கள்ளச்சாராய வியாபாரிகளுக்குத் துணைபோன தி.மு.க-வினர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அவர்களை இதுவரை கைதுசெய்யாதது ஏன்? என்பதையும் தி.மு.க அரசு விளக்க வேண்டும். ஆகவே, தி.மு.க அரசு கள்ளச்சாராய விற்பனையை முழுதாக ஒழிப்பதோடு, தமிழ்நாட்டில் மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்தி, அரசு நடத்தும் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக இழுத்து மூட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” சீமான் கூறியிருக்கிறார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *