May16,2023
மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு இன்று சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. டெங்கு சிகிச்சை பெறுபவர்களை தொடர்ந்து கண்காணிக்க அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். 15 ஆயிரத்து 853 கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் , “கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 66 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 13 இறப்புகள் ஏற்பட்டுள்ளது; கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று பார்வையிட உள்ளேன். கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வரும் நிலையில் அனைவரும் நலம் அடையும் வரை சிகிச்சை தரப்படும்” என்றார் .