கலைஞரின் பேனா நினைவு சின்னம் – நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி

ஏப்ரல்.29

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக நடுக்கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், முதல்கட்டமாக மத்திய அரசின் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, அண்மையில் தமிழக அரசின் சார்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் தமிழக பொதுப்பணித்துறை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, விரைவில் கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது. பேனா சின்னம் அமைப்பதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும்போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 15 நிபந்தனைகளை விதித்து, பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான அனுமதியை சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *