கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு…. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்திப்பு!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிந்தபிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு நடைபெறும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் அண்மையில் மேற்கு வங்கம் சென்று அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான மம்தா பானர்ஜி சந்தித்து பேசினர். அதன் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பானர்ஜி பேசுகையில், நான் நிதிஷ் குமாரிடம் ஒரே ஒரு கோரிக்கையை வைத்துள்ளேன்.

ஜெயப்பிரகாஷ் ஜியின் இயக்கம் பீகாரில் இருந்து தொடங்கியது. பீகாரில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால், அடுத்து எங்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். ஆனால் முதலில் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற செய்தியை கொடுக்க வேண்டும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று முன்பே சொல்லி விட்டேன் என்று தெரிவித்தார். இதனை நிதிஷ் குமாரும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், நேற்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் எதிர்க்கட்சிகளின் கூட்டம் எப்போது மற்றும் பாட்னாவில் நடைபெறுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு நிதிஷ் குமார் பதிலளிக்கையில் கூறியதாவது: 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைப்பது தொடர்பான பிரச்சினையை நாங்கள் கண்டிப்பாக ஒன்றாக அமர்ந்து விவாதிப்போம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உருவாக்குவது தொடர்பான விவகாரங்கள் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் சில தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். அது முடிந்ததும் கூட்டம் நடைபெறும் இடத்தை இறுதி செய்வோம். எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் பாட்னாவில் நடத்த ஒரு மனதாக முடிவு செய்தால் அது இங்கு நடைபெறும். இந்த (எதிர்க்கட்சி தலைவர்கள்) கூட்டத்தை பாட்னாவில் ஏற்பாடு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *