கர்நாடக தேர்தல் – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு எல்லையோர மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நாளுக்கு நாள் அனல் பறக்கும் பரப்புரையால், தலைவர்கள் வருகை மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் என கர்நாடக தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகள் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதவகையில் பாஜக கடந்த வாரம் திங்கள் கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இலவச பால், ரேஷன் கடைகளில் 5 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்படும் என அசத்தலான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதேபோல் செவ்வாய் கிழமை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது. பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா ஒட்டியுள்ள நாச்சிக்குப்பம், கர்னூர், கோட்டயூர், தளி, ஜவளகிரி, சொக்காபுரம், பேரிகை, முகலப்பள்ளி, பாகலூர் மற்றும் கக்கனூர் கிராமங்களில் அமைந்துள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவில் 12 டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று மாலை 6 மணி முதல் 10-ந்தேதி அன்று நள்ளிரவு வரை மூடப்படும் என கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *