ஓ.பி.எஸ். வேட்பாளர்கள் வாபஸ்

கர்நாடக தேர்தலில் ஓ.பி.எஸ் அணி வேட்பாளர்கள் விலகல் -புகழேந்தி அறிவிப்பு

ஏப்ரல்.24

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவித்திருந்த நிலையில், வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை திரும்பப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு வரும் 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. போட்டியிட விரும்பியது. ஆனால், பாஜக தனியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், அ.தி.மு.க தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

மேலும், பெங்களூரு புலிகேசிநகர் தொகுதிக்கு மட்டும் அ.தி.மு.க. சார்பில் அன்பரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்படி, அவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால், புலிகேசிநகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தார். அதன்படி, புலிகேசிநகரில் நெடுஞ்செழியனும், காந்திநகரில் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜும் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். அதன்படி, 3 நபர்களும் வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்தனர்.
கடந்த 20-ந் தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையின்போது புலிகேசிநகர் தொகுதி வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காந்திநகரில் குமார், கோலார் தங்கவயலில் அனந்தராஜ் ஆகிய 2 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டது. இதில் வேட்பாளர் குமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. கோலார் தங்கவயலில் அனந்தராஜும் இரட்டை இலை சின்னம் கிடைக்க இருப்பதாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், கர்நாடக மாநில தேர்தல் அதிகாரியை சந்தித்து, கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி.குமார் புகார் மனுவை அளித்தார். அதில், கர்நாடக சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எங்களது கட்சி(அ.தி.மு.க.) தவிர வேறு யாருக்கும் ஒதுக்க கூடாது என தெரிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து, கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற இருப்பதாக வா.புகழேந்தி தெரிவித்துள்ளார். ஏற்கனவே புலிகேசிநகர் தொகுதியில் நெடுஞ்செழியன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், காந்திநகரில் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜும் வேட்பு மனுக்களை திரும்பப்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *