May 31, 2023
காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்டுவது தொடர்பாக அம்மாநில அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காங்கிரஸ் அரசு, மூலம் இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கர்நாடகாவின் துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், “கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டம், மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பேன். விரைவில் அனுமதி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வேன். மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை” என்று தெரிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சரான சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று தெரிவித்து இருக்கிறார். இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். ஆனால் அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. நாங்கள் மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.