கர்நாடகா: “முடிவுகளை லோக்சபா தேர்தலில் மீண்டெழ எடுத்துக்கொள்வோம்”- பசவராஜ் பொம்மை

May 13,2023

“பிரதமரும், பா.ஜ.க தொண்டர்களும் தேர்தலில் மிகுந்த முயற்சியை மேற்கொண்டனர். இருந்தாலும் குறிப்பிட்ட இலக்கை அடையமுடியவில்லை.” – பசவராஜ் பொம்மை

கர்நாடகாவில் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலைமுதல் பரபரப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 224 இடங்களில் 113 இடங்களைக் கைப்பற்றினாலே ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில், மதியம் ஒரு மணியளவில் 130 இடங்களில் காங்கிரஸ் முன்னணியில் இருக்கிறது. அதேபோல் பாஜக 66 இடங்களிலும், ஜே.டி.எஸ் 22 இடங்களில் முன்னணியில் இருக்கிறது.

இதனால் பல்வேறு மாநிலங்களிலுள்ள காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் இப்போது பட்டாசு வெடித்து ஆரவாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, இந்த தேர்தல் முடிவுகளை அடுத்துவரும் லோக்சபா தேர்தலுக்கு எடுத்துக்கொள்வோம் எனக் கூறியிருக்கிறார்.

எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, “பிரதமரும், பா.ஜ.க தொண்டர்களும் தேர்தலில் மிகுந்த முயற்சியை மேற்கொண்டனர். இருந்தாலும் குறிப்பிட்ட இலக்கை அடையமுடியவில்லை. இருப்பினும் முழு முடிவுகள் வந்த பிறகு அதனை ஆய்வு செய்வோம். மேலும் இந்த முடிவுகளை லோக்சபா தேர்தலில் மீண்டெழ எடுத்துக்கொள்வோம்” என்று கூறினார்.

இதேபோல் கர்நாடக அமைச்சர் சி.என்.அஸ்வத்நாராயணன், “மக்களின் தீர்ப்பு தற்போது காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கிறது. இந்த முடிவுகளைப் பார்க்கையில் ஆச்சர்யமாக இருக்கிறது. நாங்கள் நன்றாகவே செயல்பட்டோம். இருந்தாலும் மக்களின் தீர்ப்பை ஏற்கவேண்டும். அதேசமயம் பா.ஜ.க-வுக்கு எதிரான காரணிகளை கண்டறிந்து அதுபற்றி விவாதிப்போம்” என்றார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *