கரூர் மாவட்ட எஸ்.பி.மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

மே.27

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தச் சென்ற வருமான வரித் துறையினர் மீது திமுகவினர் தாக்கல் நடத்திய விவகாரத்தில் மாவட்ட எஸ்.பி.மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்வதாக இருந்தது. இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கின் ஆதரவாளர்கள், வருமான வரித் துறையினரை முற்றுகையிட்டு அச்சுறுத்தியதுடன், அவர்களதுவாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

வருமான வரித் துறை அதிகாரிகள் மீதான திமுகவினரின் தாக்குதல், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. சோதனை குறித்த தகவல் வராததால், வருமான வரித் துறையினருக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது. வருமான வரித் துறையினர் வந்தது திமுகவினருக்கு மட்டும் தெரிந்து, உடனடியாக சோதனை நடைபெறும் இடத்தில் கூட்டம் சேர்ந்தபோது, உடனடியாக காவல் துறையினர் விரைந்து செல்லாதது ஏன்?

சட்டத்துக்குப் புறம்பான பரிவர்த்தனை சம்பந்தமான ஆவணங்கள், சொத்து விவரங்கள், பணம் மற்றும் நகை ஆகியவற்றைப் பதுக்க வருமானவரித் துறை சோதனை தடுக்கப்பட்டதா என்று சந்தேகம் எழுகிறது.எனவே, வருமான வரித் துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்துகொண்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வருமான வரித் துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கத் தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *