கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பிடிபட்ட ரொக்கம், பரிசு பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவற்றின் மதிப்பு கடந்த தேர்தலை விட 4.5 மடங்கு அதிகம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் சட்டமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் போதே, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கண்டிப்புடன் ஒரு விஷயத்தை முன்வைத்தார். அதாவது, பணப்பட்டுவாடா தீவிரமாக கண்காணிக்கப்படும். விதிகளை மீறி நடந்து கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். கடந்த சில வாரங்களாக தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்தது.
கர்நாடக தேர்தல் களம்
இந்த காலகட்டத்தில் பரிசு பொருட்கள் விநியோகத்தில் அரசியல் கட்சிகள் பலவும் சிக்கின. ஆன்லைன் மூலம் பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றியும் கண்காணிப்பு தீவிரம் அடைந்தது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்ட பணம், பரிசு பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தது.
இதில் மாநில போலீசார், வருமான வரித்துறை, வணிக வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ், ரயில்வே போலீசார், மத்திய தொழிற் பாதுகாப்பு படை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. மாநில அளவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை, எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்தல் போன்றவற்றில் தேர்தல் ஆணையம் அதிக கவனம் செலுத்தியது.
தற்போது கைப்பற்றப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பானது கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் 4.5 மடங்கு அதிகம் என்று தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு 375 கோடி ரூபாய் எனச் சொல்லப்படுகிறது. அதில், 147.46 கோடி ரூபாய் ரொக்கம், 83.66 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், 23.67 கோடி ரூபாய் மதிப்பில் போதைப் பொருட்கள், 96.60 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், 24.21 கோடி ரூபாய் மதிப்புள்ள இலவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக வேட்பாளர்களின் தேர்தல் செலவு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதனால் வேட்பாளர்கள் சற்று கலக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
நாளைய தினம் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கின்றன. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பிறகு எக்ஸிட் போல் எனப்படும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகும். இதை வெளியிட பல்வேறு செய்தி நிறுவனங்கள் தயாராகி வருகிறது. வரும் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆளும் பாஜக அரசை வீழ்த்த காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. குறிப்பாக தேர்தல் அறிக்கையே இலவசங்கள் உடன் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இதற்கான பலனை தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.