ஐ.டி. ஹார்வேர் துறையில் கவனம் செலுத்தும் மத்திய அரசு..! 2.75 லட்சம் பேர் வேலை பெற வாய்ப்பு..!!

மே.25

இந்தியாவில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பிஎல்ஐ எனப்படும் ‘உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 2.75 லட்சம் பேர் வேலை பெற வாய்ப்பு உருவாகியுள்ளது.

மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் ( production linked incentive scheme) நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் பிஎல்ஐ திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு தற்போது, ஐடி ஹார்டுவேர் துறைக்கு இத்திட்டத்தின்கீழ் சலுகைகளை அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளில் ஐடி ஹார்டுவேர் உற்பத்தித் துறைக்கு மட்டும் ரூ.17,000 கோடி மதிப்பிலான உற்பத்தி இணைப்புச் சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மடிக்கணினிகள், கணினிகள், சர்வர்கள், அல்ட்ரா-சிறிய வடிவ காரணி சாதனங்கள் ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 6 ஆண்டுகளில் ரூ.3.35 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் PLI 2.0 இன் கீழ் இந்த சலுகைகளுக்குத் தகுதியுடையவை. இந்தச் சலுகைகள் மூலம் ரூ.3.35 லட்சம் கோடி மதிப்பிலான கூடுதல் உற்பத்தி நடைபெறும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 75,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், இந்தத் துறையில் நேரடி-மறைமுக வேலைவாய்ப்பு விகிதம் 1:3 ஆக இருக்கும் எனவும், இதனால் மேலும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

கடந்த 2020 ஏப்ரலில் முதன்முறையாக PLI திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. உள்நாட்டு மொபைல் போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்த திட்டம் மூலம் எதிர்பார்த்தபடியே உள்நாட்டு மொபைல் உற்பத்தியும் அதிகரித்தது.

தற்போது, உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தி நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்த மார்ச் மாத நிலவரப்படி, இந்தியா 11 பில்லியன் டாலர் மதிப்புள்ள மொபைல் போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த வெற்றியின் அடிப்படையில், IT வன்பொருளுக்கான இரண்டாவது சுற்று PLI ஊக்கத்தொகைக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

மொபைல் போன் ஏற்றுமதியில் கடந்த ஆண்டு 10 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்தியா 105 பில்லியன் டாலர் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. இப்போது, இது மடிக்கணினிகள் மற்றும் பிற மேம்பட்ட கணினிகள் போன்ற சாதனங்களின் உற்பத்தியுடன் ஸ்மார்ட்போன் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. PLI திட்டத்தின் ரூ.17,000 கோடி சலுகைகளின் மூலம் நாட்டின் மொத்த மின்னணு உற்பத்தி ஆண்டுக்கு 300 பில்லியன் டாலர் அளவுக்கு உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *