எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும்… ஐடி ரெய்டு குறித்து செந்தில் பாலாஜி பதில்!

May 28, 2023

கரூரில் நடைபெற்று வரும் வருமானவரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று தகவல் கிடைத்துள்ளது. எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் எம்.பி. தேர்தலில் திமுக வெற்றியை தடுக்க முடியாது. எனவே, சோதனை முழுவதுமாக முடிந்தபின் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் பேட்டி அளித்துள்ளார். கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் அமைச்சர் செய்தியாளர் அளித்த பேட்டியில், வருமான வரித்துறை சோதனை நடைபெறும் நிறுவனங்கள் எல்லாம் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது உள்ள நிறுவனங்கள். எனக்கு வேண்டியவர்கள் அவர்களது நண்பர்கள் என செவி வழி செய்தியாக எனக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. வருமானவரிச் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். சோதனைகள் முடிந்த பிறகு முழு விவரங்கள் தெரியவரும். சுவர் ஏறி குதித்து உள்ளே வந்தது. இரண்டு பெரிய பைகளைகொண்டு வந்ததன் காரணமாக கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது.

யார் வீட்டிலும் திடீரென்று உள்ளே நுழையும் போது அடையாள அட்டை காண்பியுங்கள் என்று கேட்பது வழக்கம். கதவை தட்டும் போது நீங்கள் யார் என கேட்டு கதவை திறப்பது வழக்கம். அந்த அடிப்படையில் மாவட்ட காவல் அதிகாரி தகவல் இல்லை என கூறியதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ளாமல் விமர்சித்துள்ளார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு லாயக்கற்றவர். வேலுமணி போன்றவர்கள் வீட்டில் சோதனை நடைபெற்ற போது கட்சிக்காரர்களை அங்கே கொண்டுவந்து குவித்து மூன்று வேளை அவர்களுக்கு சாப்பாடு வழங்கிய இடையூறு செய்தது போல் இங்கு யாரும் செய்யவில்லை. சந்தேகப்பட்டு அங்கு வந்தவர்களையும் உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு கூறி தற்போது சோதனை சமூகமாக நடைபெற்று வருகிறது. சொந்த தொகுதியிலேயே வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் ஜெயக்குமார். தொலைக்காட்சிகளில் காமெடியனாக வந்து போய்க்கொண்டிருக்கிறார். அவரது கூற்றுக்கெல்லாம் நான் பதில் அளிக்க விரும்பவில்லை.

சட்டமன்றத் தேர்தலின் போது நான் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த சமயத்தில் ரைடு நடத்தினார்கள். எத்தனையோ ரெய்டுகளை சந்தித்து இருக்கிறேன். இன்னும் எத்தனை ரைடு வந்தாலும் சந்திப்பேன். ஓராயிரம் சோதனைகளை நடத்தினாலும் சரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நலத்திட்டங்களினால் இந்த அரசு மிகப் பெரிய வரவேற்பினை மக்கள் மத்தியில் பெற்றிருக்கிறது. பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெறுவதை எத்தனை ரைடு நடத்தினாலும் தடுக்க முடியாது என்றார்.

கரூரில் இரண்டாவது நாளாக காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள பிரேம்குமார் – சோபனா தம்பதியர் வீடு, ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் அலுவலகம், பால விநாயகா ப்ளூ மெட்டல் உரிமையாளர் தங்கராஜ் வீடு ஆகிய இடங்களில் வருமான வரி துறை சோதனை தொடர்கிறது. இதில், இன்று மாலை இரண்டு இடங்களில் இயங்கி வந்த கொங்கு மெஸ் உணவகத்துக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தற்போது செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள கணேஸ்முருகன் ட்ரான்ஸ்போர்ட் அலுவலகம், வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அலுவலகம் என இரண்டு புதிய இடங்கள் உட்பட நான்கு இடங்களில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் இரவிலும் சோதனை தொடர்கிறது மூன்றாவது நாளாக நாளையும் சோதனை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *