ஏப்ரல்.26
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு ரூ.1500 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாகக் கொடுத்து முகேஷ் அம்பானி அசத்தியுள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் மனோஜ் மோடி. இவர் முகேஷ் அம்பானியின் ஆரம்பக் கால நண்பர் ஆவார். முகேஷ் அம்பானியும், மனோஜ் மோடியும் மும்பை பல்கலைக்கழகத்தில் ஒன்றாக கெமிக்கல் டெக்னாலஜி பயின்றவர்கள்.
1980-ம் ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் அடியெடுத்து வைத்த மனோஜ் மோடி, பல ஆண்டுகளாக முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானியின் உற்ற நண்பராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு மும்பை நேப்பியன் கடற்கரை சாலை பகுதியில், 1.7 லட்சம் சதுர அடி கொண்ட 22 மாடி சொகுசு அடுக்குமாடி பங்களாவை முகேஷ் அம்பானி பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு 1500 கோடி ரூபாய் ஆகும்.
இந்த பிரம்மாண்ட வீட்டின் முதல் 7 மாடிகள் கார் நிறுத்தத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. வீட்டிற்கு தேவையான மரச்சாமான்கள் மற்றும் உபயோகப் பொருட்கள் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை பேசி முடிப்பதில் மனோஜ் மோடி முக்கிய மூளையாக செயல்பட்டவர். குறிப்பாக 2020ம் ஆண்டு ஃபேஸ்புக் – ஜியோ ஒப்பந்தத்தை முடிவு செய்ததில் இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நீண்ட நாள் நண்பரும், நம்பிக்கைக்குரிய ஊழியராகவும் இருந்துவரும் மனோஜ்மோடிக்கு முகேஷ் அம்பானி அளித்துள்ள ரூ.1500 கோடி மதிப்பிலான வீடு தற்போது பேசுபொருளாக இருந்துவருகிறது.