மே.25
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடிக்கு சிட்னியில் அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இரு நாட்டு வணிகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தொடர்பாக பணிக்குழு அமைக்கவும் அந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதோடு, இருநாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இதைத் தொடர்ந்து, இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஆஸ்திரேலியாவில் கோயில்கள்மீது நடந்த தாக்குதல்கள் குறித்து ஆலோசித்ததாக தெரிவித்த பிரதமர் மோடி, பிரிவினைவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்துள்ளதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர், பெங்களூருவில் ஆஸ்திரேலிய துணை தூதரகம் அமைய இருப்பதாக அறிவித்தார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் இந்திய தூதரகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், இந்தியாவில் தூதரகம் அமைக்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, இந்தியாவில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டி மற்றும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களைக் காண வருமாறு ஆஸ்திரேலியா பிரதமருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.