ஏப்ரல்.19
கோடை சீசனுக்காக உதகையிலிருந்து கேத்தி ரயில் நிலையம் இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில், உதகை ரயில் நிலையத்திலிருந்து வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கேத்தி வரை இயக்கப்படுகிறது.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள், யுனெஸ்கோ அந்தஸ்துபெற்ற பாரம்பரிய நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், தினந்தோறும் மேட்டுபாளையம் – குன்னூர் – உதகை இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல உதகை – குன்னூர் இடையிலும் மலை ரயில் இயக்கப்படுகிறது.
தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதையடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டும் நிலையில், வழக்கமாக இயக்கப்படும் மலை ரயிலில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்படுகிறது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில், கோடை சீசனுக்காக உதகையிலிருந்து கேத்தி ரயில் நிலையம் இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
உ
உதகை ரயில் நிலையத்திலிருந்து காலை 9.45 மணி, 11.30 மணி மாலை 3 மணி என வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இந்த மலை ரயில் கேத்தி வரை இயக்கப்படுகிறது. உதகையிலிருந்து கேத்தி சென்று மீண்டும் உதகைக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து வரப்படுவார்கள். முதல் வகுப்பில் பயணம் செய்ய ரூ.630ம், 2-ஆம் வகுப்பில் பயணம் செய்ய ரூ.465ம் கட்டணமாக வசூலிக்கப்படுவதுடன் சிறப்பு சிற்றுண்டியும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.