உக்ரைன் போர்… உளவு பார்க்கப்பட்ட நட்பு நாடுகள் – சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பிய`Pentagon Leak’

தனது நட்பு நாடுகளையும் அமெரிக்கா உளவு பார்த்து வருவது, பென்டகனிலிருந்து அண்மையில் கசிந்த ரகசிய ஆவணங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

உலகில் சக்திவாய்ந்த ராணுவக் கட்டமைப்புகளை வைத்திருக்கும் நாடுகளில், அமெரிக்காவுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகம் பென்டகன் ஆகும். இது வெர்ஜீனியாவின் ஆர்லிங்டனில் இருக்கிறது. இது பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கட்டடங்களில் ஒன்றாகும்.

இங்கு ராணுவ உபகரணங்கள் மட்டுமல்லாமல், அந்த நாட்டின் ராணுவ ரகசியங்கள், எதிரி நாடுகளை கட்டுப்படுத்தும் திட்டங்கள் உள்ளிட்டவற்றின் தரவுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு எடுக்கப்படும் முடிவுகள் அமெரிக்காவை மட்டும் சார்ந்து அல்லாமல், சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட பென்டகனிலிருந்து ரகசிய ஆவணங்கள் கடந்த வாரம் இணையத்தில் கசிந்ததாகக் கூறப்படுகிறது. அதில் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றனவாம். குறிப்பாக உக்ரைனுக்கு உதவி செய்வதற்கான நேட்டோ படையினரின் திட்டங்கள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்திருக்கிறது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தென் கொரியா போன்ற நட்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா ஒட்டுக்கேட்டிருப்பது குறித்த தகவலும் அந்த ரகசிய ஆவணங்களின் மூலம் தெரியவந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதில், உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப வேண்டும் என்று தென் கொரியாவுக்கு வலியுறுத்தலை அமெரிக்கா வழங்கியிருப்பது குறித்த தகவலும் இடம்பெற்றிருக்கிறது. மேலும் போர் நடைபெறும் அந்நிய நாட்டில் யாருக்கும் ஆதரவாக ராணுவ உதவி செய்யக்கூடாது என்ற தனது நிலைப்பாட்டை கைவிடவும் தென்கொரியா தயங்கியது, அந்த உரையாடல்களின் மூலம் தெரியவந்திருக்கிறது.

இந்த விவகாரம் அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் இருக்கும் உறவில் விரிசலை ஏற்படுத்தும் எனப் பேசப்படுகிறது. இதே போல் இஸ்ரேலும் தனது ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டியது. ஆரம்ப எச்சரிக்கை அமைப்பை உருவாக்க உக்ரைனுக்கு அந்த நாடு உதவினாலும், அது எந்தவிதமான ஆபத்தான ஆயுதங்களையும் வழங்க மறுத்துவிட்டது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *