இ.பி.எஸ் எங்கு சென்றாலும்….. அவர் செய்த பாவம் நீங்காது!

May 12,2023

எட்டுத்‌ தேர்தல்களில்‌ தொடர்‌ தோல்வியைச்‌ சந்தித்து மண்ணைக்‌ கவ்விய ‘துரோகி’ எடப்பாடி கே. பழனிசாமி ஒரு கானல்‌ நீர்‌ என வைத்திலிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தான்‌ யார்‌ யார்‌ காலைப்‌ பிடித்து, ஊர்ந்து முதலமைச்சராக ஆனார்‌ என்பதையும்‌; யாரிடம்‌ கெஞ்சி கூத்தாடி, தூதுவிட்டு முதலமைச்சராக நான்கு ஆண்டு காலம்‌ நீடித்தார்‌ என்பதையும்‌ மறந்து, இல்லை மறைத்து, திரு. ஓ. பன்னீர்செல்வம்‌ அவர்களும்‌, திரு. டி.டி.வி. தினகரன்‌ அவர்களும்‌ சந்தித்ததை மாய மானும்‌, மண்‌ குதிரையும்‌ ஒன்று சேர்ந்துள்ளது என்று துரோகி விமர்சித்துள்ளது “நன்றி கெட்ட மனிதனைவிட நாய்கள்‌ மேலடா” என்பதற்கேற்ப அமைந்துள்ளது.

அதிமுகவின் ‌ திருச்சி மாநாடு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய நிலையில்‌, இருவரின்‌ சந்திப்பானது காலியான கூடாரத்தில்‌ ஒட்டகம்‌ புகுந்ததைப்‌ போன்று உள்ளது என்று துரோகி சொல்வது கேலிக்கூத்தாக இருக்கிறது. “ஆமை புகுந்த வீடும்‌, அமீனா நுழைந்த வீடும்‌ உருப்படாது” என்ற பழமொழிக்கேற்ப, துரோகியின்‌ நுழைவால்‌ அழிவுப்‌ பாதையை நோக்கிச்‌ சென்று கொண்டிருக்கிற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ என்னும்‌ மாபெரும்‌ மக்கள்‌ இயக்கத்தை தொண்டர்கள்‌ இயக்கமாக மாற்றுவதற்கான சந்திப்புதான்‌ இருவரின்‌ சந்திப்பு.

புது டெல்லியில்‌ மத்திய உள்‌ துறை அமைச்சர்‌ சந்திப்பின்போது சிலர்‌ இடம்பெறாதது குறித்து தொலைக்காட்சிகளில்‌ நடைபெற்ற விவாதத்திற்கு பதில்‌ அளிக்க இயலாத எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம்‌ – டி.டி.வி. தினகரன்‌ சந்திப்பின்போது, வைத்திலிங்கம்‌ எங்கே? ஜெ.சி.டி. பிரபாகர்‌ எங்கே ? மனோஜ்‌ பாண்டியன் எங்கே ? என்று வினவியிருக்கிறார்‌. இந்தச்‌ சந்திப்பே நாங்கள் ஒன்றுகூடி முடிவு எடுத்த பிறகுதான்‌ நடைபெற்றது. மற்றவர்களை பற்றி பேசும்முன்‌ தன்‌ முதுகில்‌ உள்ள ஒட்டையை எடப்பாடி பழனிசாமி அவர்கள்‌ பார்க்க வேண்டும்‌ என்பதைச்‌ சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்‌.

அடுத்தபடியாக, சபரீசனை அண்ணன் ஓ. பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ சந்தித்ததன்‌ காரணமாக, திரு. ஒ. பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ தி.மு.க.வின்‌ “B” டீம்‌ என்றுதுரோகி கூறியுள்ளது சாத்தான்‌ வேதம்‌ ஓதுவது போல்‌ உள்ளது. அண்ணன்‌ அவர்கள்‌ கிரிக்கெட்‌ விளையாட்டினை தன்னுடைய பேரப்‌ பிள்ளைகளுடன்‌ காணுகின்றபோது, சபரீசன்‌ சந்திப்பு நிகழ்ந்தது. திரு. சபரீசன்‌ சந்திப்பு என்பது பல ஆயிரம்‌ பேர்களுக்கு மத்தியில்‌ நிகழ்ந்த ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. இதுகுறித்து துரோகி கேள்வி கேட்பது, அவர்‌ நாகரிகம்‌ மற்றும்‌ பண்பாடு தெரியாதவர்‌ என்பதை படம்‌ போட்டுக்‌ காண்பிக்கிறது. உண்மையில்‌ தி.மு.க.வின்‌ “B” டீமாக செயல்படுவது துரோகிதான்‌ என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்‌. இதனை அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள்‌ எளிதில்‌ புரிந்து கொள்வார்கள்‌.

அடுத்ததாக, அதிமுக‌ அரசியல்‌ ஆலோசகரும்‌, மூத்த அரசியல்வாதியுமான பண்ரூட்டி இராமச்சந்திரன்‌ அவர்கள்‌ கிளைச்‌ செயலாளருக்கு கூட தகுதி இல்லாதவர்‌ என்று துரோகி விமர்சனம்‌ செய்திருப்பது அவரது அறியாமையையும்‌, ஆளுமைத்‌ திறமையின்மையையும்‌ கோடிட்டுக்‌ காட்டுகிறது. பண்ருட்டி இராமச்சந்திரன்‌ அவர்கள்‌ பேரறிஞர்‌ அண்ணா அவர்களால்‌ தமிழக மக்களுக்கு அடையாளம்‌ காட்டப்பட்டவர்‌. அரசு வேலையை உதறித்‌ தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்தவர்‌. புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்கள்‌ அமைச்சரவையில்‌ பல ஆண்டு காலம்‌ அமைச்சர்‌ பதவியை வகித்தவர்‌. புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ அன்பைப்‌ பெற்றவர்‌. இவரை விமர்சனம்‌ செய்வது என்பது ஆணவத்தின்‌ வெளிப்பாடு. கொலை வழக்கிலிருந்து தப்பியது எப்படி? சட்டமன்ற உறுப்பினரானது எப்படி? அமைச்சரானது எப்படி ? முதலமைச்சரானது எப்படி ? முதலமைச்சராக நான்கு ஆண்டு காலம்‌ நீடித்தது எப்படி? என்பதையெல்லாம்‌ மறந்து மனம்‌ போன போக்கில்‌ துரோகி பேட்டி அளித்திருப்பதைப்‌ பார்க்கும்போது “மனம்‌ ஒரு குரங்கு” என்ற பழமொழிதான்‌ நினைவிற்கு வருகிறது.

சுருக்கமாகச்‌ சொல்ல வேண்டுமென்றால்‌ கோயபல்ஸ்‌ வேலையை செய்து கொண்டிருக்கிறார்‌ எடப்பாடி பழனிசாமி. இது நிச்சயம்‌ தொண்டர்கள்‌ மத்தியிலும்‌, மக்கள்‌ மத்தியிலும்‌ எடுபடாது. ‘கெட்டிக்காரன்‌ புளுகு எட்டு நாளைக்கு” என்பார்கள்‌. ஆனால்‌, கெட்டவனின்‌ புளுகு எட்டு மணி நேரத்திற்கு கூட தாங்காது. இந்த வகையில்‌ எடப்பாடி பழனிசாமியின்‌ குட்டு வெளிப்பட்டுவிட்டது. தி.மு.க.வின்‌ பி டீமாக செயல்படுவது துரோகி என்பதை தொண்டர்களும்‌, மக்களும்‌ புரிந்து கொண்டுவிட்டார்கள். ‘செய்நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம்‌ இல்லை’ என்ற வள்ளுவரின்‌ வாய்மொழிக்கிணங்க, அவர்‌ செய்த பாவத்திலிருந்து என்றைக்கும்‌ விடுபட முடியாது.” என்று கூறியுள்ளார்

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *