இளம் மருத்துவர்கள் உருவாக்கிய Healboxx செயலி – கோவையில் அறிமுகம்!

ஏப்ரல்.26

மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக உளவியல் ஆலோசனைகளை வழங்கும் வகையில் கோவையை சேர்ந்த இளம் மருத்துவர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் இணைந்து உருவாக்கிய ஹீல் பாக்ஸ் (Healboxx) எனும் செயலி இன்று கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

கோவையை சேர்ந்த மனநல மருத்துவர் நான்சி குரியன், மனநலம் தொடர்பான துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவரது இளைய மகன் மேத்யூ, உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த போது, அங்கு ஏற்பட்ட போர் சூழல் காரணமாக மிகுந்த சிரமங்களுக்கு இடையே நாடு திரும்பினார்.

இந்தியா திரும்பிய அவர், உக்ரைனில் நாடு திரும்ப முடியாமல் இருந்த தன்னைப்போல மருத்துவ மாணவர்களின் மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இந்தியாவில் இருந்தபடியே போன் வாயிலாக ஆறுதல் வழங்கியும், உளவியல் ஆலோசனைகளை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் உளவியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு அனைத்து தரப்பினருக்கும் தீர்வு காணும் வகையில், தொழில் நுட்ப அடிப்படையி்ல் ஹீல் பாக்ஸ் HEALBOXX எனும் செயலியை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

அவரது மூத்த சகோதரரான இளம் மருத்துவர் லூக் குரியன் உதவியுடன் இந்திய அளவில் முதல் முறையாக தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த செயலியை உருவாக்கி அசத்தி உள்ளனர். இது குறித்து மனநல மருத்துவர் நான்சி குரியன், இளம் மருத்துவர்கள் லூக், மேத்யூ ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது, தொழில்நுட்ப அடிப்படையிலான மனநலம் காக்கும் உளவியல் ஆலோசனைகள் இந்த செயலியின் மூலம் வழங்கப்படும். இதில், தனி நபர்கள், தம்பதிகள், மாணவர்கள் மற்றும் அனைத்து வயதினருக்கும் தனிப்பட்ட முறையில் உளவியல் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இந்த செயலியில் இணைந்துள்ள அனைத்து உளவியல் நிபுணர்களும் நன்கு பயிற்சி பெற்று, அனுபவம் வாய்ந்தவர்கள்.

Healboxx செயலியை Android மற்றும் iOS இயங்கு தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சங்கள் மூலம் பயனாளர்கள் உளவியல் ஆலோசனை உதவிகளை பெற்று பயனடையலாம்.

இதன் வாயிலாக மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம், தூக்கமின்மை, உறவுச் சிக்கல்கள், திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை, குழந்தை வளர்ப்பு, கற்றலில் சிரமங்கள், 18 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு பொது ஆலோசனை இளம் மாணவர்களுக்கு நேர்காணல் திறன் பயிற்சி உள்ளிட்ட அனைத்து மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *