இரண்டு துரோகிகளும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்’ – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

May 16, 2023

தினகரன் – ஓபிஎஸ் இணைந்து செயல்படுவோம் என்று அறிவித்திருப்பதற்கு ’இரண்டு துரோகிகளும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட  அவர்  பேசியதாவது: “அதிமுகவில் உள்ள ஒரு தொண்டன்கூட மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என எண்ணுகிறான். ஆனால் இங்குள்ள கட்சிக்காரர்களின் உழைப்பால் இப்பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் எம்எல்ஏவாகி, அமைச்சராகி, எம்பியாகி வந்தீர்களே; அந்த எண்ணம்  உங்களுக்கு இல்லையா. உங்களை நம்பித்தானே இங்குள்ளவர்கள் இருந்தார்கள். 20 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தீர்களே, இந்த மாவட்ட மக்களுக்கு ஏதாவது செய்தீர்களா? இதிலிருந்து வைத்திலிங்கம் எப்படிப்பட்டவர் என நீங்கள் எண்ணி்ப்பார்க்க வேண்டும்.

இங்குள்ள அமைச்சர்கள், கட்சியினர் எல்லாம் தங்களது பகுதியில் உள்ளவர்களுக்கு ஏதாவது செய்து கொடுங்கள் என கேட்பதுண்டு, ஆனால் வைத்திலிங்கம் எதுவும் கேட்க மாட்டார், யாருக்கும் எதுவும் செய்யமாட்டார். இப்படிப்பட்டவரை நான் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது.

திருச்சியில் ஒரு பொதுக்கூட்டத்தை கூட்டி வைத்திலிங்கமும், ஒ.பன்னீர்செல்வமும் என்னை கடைசி வரை திட்டியது தான் மிச்சம். ஆனால் நான் உங்களைப் போன்று அடிமட்டத்திலிருந்து வந்தவன். ஓராயிரம் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் வந்தாலும் சரி, ஒன்றும் செய்துவிட முடியாது. அதிமுகவில் துரோகிகளுக்கு இடமில்லை.

ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசும்போது எனக்கு பின்னால் இந்த இயக்கம் நூறாண்டுகள் இருக்கும் என கூறினார். ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு எவ்வளவு சோதனைகளை நாம் சந்தித்தோம். அதற்கு யார் காரணம்? முதலில் ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்கினார். மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார். அதிமுக ஆட்சியை கலைக்க  வாக்களித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம், அவரை எந்த அதிமுக தொண்டனும் மன்னிக்க மாட்டார்கள்.

ஆனால் அவருக்கு நாம் ஒருங்கிணைப்பாளர் எனவும், துணை முதல்வர் எனவும் பதவியை கொடுத்தோம். இதைவிட அவருக்கு என்ன வேண்டும். கட்சியினர் இதனை சிந்தித்து பார்க்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கத்தின் வஞ்சகமும் நாடகமும் பலிக்காது.

யாரோடு சேரக்கூடாது என எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நினைத்தார்களோ, தீயசக்தி என கூறினார்களோ, ஜெயலலிதாவின் உயிர் போக காரணமாக இருந்தார்களோ, அவர்களைச் தேடிச்சென்று திமுகவுக்கு பினாமியாக, பி டீமாக செயல்பட்டு கொண்டிருக்கீறீர்கள்.

டிடிவி.தினகரனை ஜெயலலிதா 10 ஆண்டு காலம் அதிமுகவிலிருந்து நீக்கினார். ஆனால் அவர் அதிமுக கட்சியினரிடம் ஆசை வார்த்தைகளை கூறி அமமுகவில்  இணைத்துக் கொண்டார். இன்றைக்கு நிலைமை என்ன, இப்போது இரண்டு துரோகிகளும் ஒன்றாக இணைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொலைகளின் எண்ணை 2021ம் ஆண்டில் 1597 எனவும், 2022, 2023 என எல்லா ஆண்டுகளிலும் 1597 என கூறி, கொலைகளின் எண்ணிக்கையிலும் இந்த திமுக அரசு மோசடியில் ஈடுபட்டு வருகிறது. யாராவது குற்றம் செய்தால் நீதிமன்றத்தில் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான போலீஸார் பல்லைப் பிடுங்கி கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் மின் கட்டணம்  உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, கம்பி, சிமெண்ட் என கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டாவில் திமுக ஆட்சி காலத்தில் தான் மீத்தேன், ஈத்தேன் எடுக்க அனுமதி வழங்கி, விவசாயிகளின் நிலங்களை  பாலைவனமாக்க முயன்றது.

ஆனால் அதிமுக அரசு விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு, மத்திய அரசிடம் வாதாடி, போராடி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து, விவசாயிகளை பாதுகாத்தது. திமுக எப்போதும் விவசாயிகளுக்கு துரோகம் செய்துதான் வருகிறது. இதனை இப்பகுதி விவசாயிகள் உணர வேண்டும்.

கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதிமுக ஆட்சிக் காலத்தில் இத்திட்டம் கொண்டு வந்ததால் அனைத்துப் பணிகளும் நடைபெற்றது. தற்போது திமுக அரசு இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.

அதே போல் ’நடந்தாய் வாழி காவிரி’ என்ற திட்டத்தில் அசுத்த நீரை வெளியேற்ற திட்டம் தீட்டி மத்திய அரசிடம் அதிமுக ஆட்சி காலத்தில் அனுப்பினோம். இது தொடர்பாக நாடாளுமன்ற, மக்களவைக் கூட்டுக்குழுவுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த திட்டம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த 38 எம்பிக்களும் இதுவரை பேசவில்லை.

அதிமுக கட்சி தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *