இப்படியும் ஒரு முதல்வரா… நகரின் வளர்ச்சிக்காக அப்பாவின் சமாதியை அகற்றிய நவீன் பட்நாயக்!

May 19,2023

ஒடிசா முதல்வரான நவீன் பட்நாயக் நகரின் வளர்ச்சிக்காக தனது அப்பாவின் சமாதியை அகற்றியிருப்பது நெகிழ வைத்துள்ளது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒடிசா முதல்வரான நவீன் பட்நாயக் நகரின் வளர்ச்சிக்காக தனது அப்பாவின் நினைவிடத்தை அகற்றி இருப்பது நெகிழ வைத்துள்ளது.

ஓடிசா முதல்வராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து வருபவர் நவீன் பட்நாயக். பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக், தொடர்ந்து 5வது முறையாக முதல்வராக பதவி வகித்து வருகிறார். பவன் சாம்லிங் மற்றும் ஜோதி பாசுவுக்குப் பிறகு தொடர்ந்து 5வது முறை முதல்வராக நீண்டகாலம் பதவி வகிப்பவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

மாநிலத்தின் முதல்வர் என்பதையும் தாண்டி, எழுத்தாளரான நவீன் பட்நாயக் 3 புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். தனது அப்பாவான ஓடிசாவின் முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக்கின் மறைவுக்கு பிறகு 1997ஆம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த நவீன் பட்நாயக், மக்கள் மனதில் மிஸ்டர் க்ளீன் என்ற தகுதியுடன் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

தனது மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் நவீன் பட்நாயக், புரி நகரின் வளர்ச்சிக்காக தனது தந்தையின் சமாதியை அகற்ற உத்தரவிட்டு ஒடிசா மட்டுமின்றி நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். நவீன் பட்நாயக்கின் தந்தையான பிஜூ பட்நாயக் கடந்த 1997 ஆம் ஆண்டு காலமானார். அவரது உடல் புரி நகரில் உள்ள ஸ்வர்கத்வார் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அந்த மயானத்திலேயே அவருக்கு பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் புனித யாத்திரை நகரான புரி நகரை மேம்படுத்தவும், இந்த மயானத்தை அழகுபடுத்தவும் நவீன் பட்நாயக்கின் அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கான திட்டத்தை செயல்படுத்த பிஜூ பட்நாயக்கின் நினைவிடம் தடையாக இருந்தது. அந்த நினைவிடம் மயானத்தின் பெரும்பாலான இடத்தை பிடித்திருந்தது. மேலும் மயானத்தை அழகுப்படுத்தவும் இந்த சமாதி தடையாக இருந்தது. இதை அறிந்த நவீன் பட்நாயக், தனது தந்தையின் நினைவிடத்தை அகற்றுமாறு உத்தரவிட்டு உள்ளார்.

இதை அவரது தனிச்செயலாளரும், 13 ஆண்டுகளாக அவருடன் நெருக்கமாக இருந்து வருபவருமான விகே பாண்டியன், துபாயில் ஒடியா புலம்பெயர்ந்தோர் மத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். தற்போது அந்த இடத்தில் நினைவிடத்திற்கு பதிலாக அவருடைய பெயர் பலகை மட்டுமே உள்ளது என்றும் விகே பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது தனது தந்தை கல்லில் வாழவில்லை மக்களின் இதயங்களில் வாழ்கிறார் என நவீன் பட்நாயக் கூறியதையும் மக்கள் மத்தியில் கூறியுள்ளார் விகே பாண்டியன். நகரின் வளர்ச்சிக்காக தனது தந்தையின் சமாதியை நவீன் பட்நாயக் அகற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவீன் பட்நாயக் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *