இந்தியா-நேபாளம் இடையே புதிதாக 7 ஒப்பந்தங்கள் – இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பில் கையெழுத்து

ஜூன்.2

இந்தியாவில் அரசுமுறை பயணமாக வந்துள்ள நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசண்டா மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் இரு நாடுகளிடையே வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

நேபாள நாட்டின் பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசண்டா 4 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக கடந்த 31ம் தேதி டெல்லி வந்தார். கடந்த டிசம்பர் மாதம் நேபாளத்தின் பிரதமராக பதவி ஏற்ற பின்னர், அவர் இந்தியா வந்திருப்பது இதுவே முதல் முறையாககும். டெல்லி வந்த அவரை மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி வரவேற்றார்

இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஐதராபாத் பவனில் பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் பிரசண்டாவும் நேற்று (ஜூன்.1) சந்தித்துப் பேசினர். அப்போது, இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில், இருநாடுகளிடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர், பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் பிரசண்டாவும் இந்தியாவின் ரூபாய் திஹாவிலும், நேபாளத்தின் நேபாள்கஞ்சிலும் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகளை காணொலிக்காட்சி வழியாக திறந்து வைத்தனர். மேலும், பீகாரின் பாட்னஹாவில் இருந்து நேபாளத்தின் புத்தாநகரில் உள்ள கஸ்டம் யார்டுக்கு சரக்கு ரெயில் போக்குவரத்தையும் காணொலிக்காட்சி வழியாக பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இரு தரப்பு உறவை இமாலய உயரத்துக்கு எடுத்துச்செல்வதற்கு தொடர்ந்து பாடுபடுவோம். எல்லைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பிற பிரச்சினைகளாக இருந்தாலும் சரி இதே உணர்வுடன் எல்லா பிரச்சினைகளுக்கும் நாங்கள் தீர்வு காண்போம். கலாசார, ஆன்மிக உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், பிரதமர் பிரசண்டாவும் நானும் ராமாயண சுற்று தொடர்பான திட்டங்களை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *