இந்தியாவில் கோடீஸ்வர முதலமைச்சர்கள் யார்?யார்? – பட்டியலை வெளியிட்டது ஏ.டி.ஆர்

இந்தியாவில் தற்போதுள்ள 30 முதலமைச்சர்களில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைவரும் கோடீஸ்வரர்கள் என ஏ.டி.ஆர் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் (டெல்லி, புதுச்சேரி) முதலமைச்சர்கள் பதவி வகித்துவருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்துவருவதால் அங்கு முதலமைச்சர் இல்லை.

இந்நிலையில், தற்போது பதவியில் உள்ள இந்த 30 முதல்வர்களும் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது சமர்ப்பித்த பிரமாண பத்திரங்களை, தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) ஆய்வுசெய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் உள்ள 30 முதலமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வர்கள் எனத் தெரியவந்துள்ளது. சொத்து மதிப்பு அடிப்படையில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முதலிடத்தில் உள்ளார். இவருக்கு ரூ.510 கோடிக்குமேல் சொத்துகள் உள்ளன. அருணாச்சல பிரதேசத்தின் பெமா காண்டு ரூ.163 கோடிக்கு மேற்பட்ட சொத்துகளுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். 63 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஒடிசாவின் நவீன் பட்நாயக் 3ம் இடத்தில் உள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, 38 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 5வது இடம் பிடித்துள்ளார். 8 கோடி ரூபாய் சொத்துகளுடன் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை 13வது இடத்திலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 14வது இடத்திலும் உள்ளனர்.

அதேபோல், தற்போது ஆட்சி நடத்தும் 30 முதலமைச்சர்களில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தவிர 25 பேர் பட்டதாரிகள். ஏக்னாத் ஷிண்டே 10-வது படித்துள்ளார். ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் 12-வது வரை மட்டுமே படித்துள்ளனர்.

மேலும், தற்போதுள்ள 30 முதலமைச்சர்களில் 13 பேர் (43%) தங்கள் மீது கடும் குற்ற வழக்குகள் (கொலை, கொலை முயற்சி, கடத்தல், குற்றசதி உள்ளிட்ட குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள்) உள்ளதாக தெரிவித்துள்ளனர். கடும் குற்ற வழக்குகள் என்பது 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனையுடன் கூடிய ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள் என ஏடிஆர் குறிப்பிட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *