ஆஸ்கர் விருது தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு – பிரதமர் மோடி வருகையையொட்டி நடவடிக்கை

தி எலிபெண்ட்ஸ் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளியை பாராட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை முதுமலைக்கு வருகிறார். இதையொட்டி, பொம்மன் பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தாயை பிரிந்த குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரித்து வரும் பாகன்களுக்கு இடையேயான பாசபிணைப்பை வைத்து தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆவண திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை மும்பையை சேர்ந்த கார்த்தகி இயக்கி இருந்தார். கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினை தி எலிபெண்ட்ஸ் விஸ்பெரர்ஸ் படம் பெற்றது.

இதையடுத்து படத்தின் இயக்குநர், படத்தில் இடம் பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதி உலக அளவில் பிரபலம் அடைந்தனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் அழைத்து பாராட்டி பரிசும் வழங்கினார். இந்த நிலையில் ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளியை பாராட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை முதுமலைக்கு வருகிறார். முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வரும் அவர், பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பாராட்டுகிறார்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பொம்மன், பெள்ளி தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களது வீட்டு முன்பு ஒரு போலீஸ் நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்திக்க வரும் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *