ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கு – நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகள் முடக்கம்

மே.4

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் செயல்பட்டுவந்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு மாதந்தோறும் 25 முதல் 30 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படும் என்று கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பணம் கட்டி ஏமாற்றமடைந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனர்கள் உள்பட 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் 13-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கைதான நடிகர் ரூசோவிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவருமான ஆர்.கே.சுரேசுக்கும் தொடர்பு இருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது.

அதன்பேரில், ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, துபாய் சென்றுள்ள ஆர்.கே.சுரேஷ், குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் ஏற்கனவே ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஆர்.கே.சுரேஷின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *