`அரசே மதுவிற்கும் நிலையில் கள்ளச்சாராய சாவுகள் ஏன்?; முதல்வர் விளக்க வேண்டும்’ – வானதி சீனிவாசன்

“தமிழ்நாட்டில் மதுவிலக்கு துறை தான், டாஸ்மாக் மது கடைகளையும் நடத்துகிறது. செந்தில் பாலாஜி, டாஸ்மாக் மது கடைகளில் விற்பனையை அதிகப்படுத்துவதில் செலுத்தும் கவனத்தை, கள்ளச்சாராயம் இல்லாத நிலையை உருவாக்குவதிலும் காட்டியிருக்க வேண்டும்” – வானதி

சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாகவும், அதை அக்கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வாங்கி அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் முதலில் சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கத்தோடு சுருண்டு விழ, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியை அடுத்த காலப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறிது நேரம் கழித்து சங்கர் மற்றும் தரணிவேலுவும் சுருண்டு விழ இவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் ஊர் முழுவதும் சாராயம் அருந்தியவர்கள் ஆங்காங்கே மயங்கிவிழ அவர்களும் ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே சிகிச்சைப் பெற்றுவந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் மற்றும் ராஜமூர்த்தி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

தகவல் அறிந்த வடக்கு மண்டல ஐஜி கண்ணன் மற்றும் விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக கலவரம் ஏதும் ஏற்படாமல் இருக்க சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் எக்கியார்குப்பத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், எக்கியார் கிராம மக்கள் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறையைக் கண்டித்து கிழக்குக் கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, வடக்கு மண்டல ஐஜி கண்ணன் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, “விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தைக் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் தலைமறைவாக உள்ளனர், அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள், செங்கல்பட்டில் ஒரு ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையின் மது விலக்கு பிரிவின் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது,” என்றார்.

இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 88 கள்ளச் சாராய வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து 226 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை வழக்குகளில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 109 லிட்டர் சாராயம், 428 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக அரசு மீது பலர் விமர்சனம் வைத்து வரும் நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், ‘அரசே மதுவிற்கும் நிலையில் கள்ளச்சாராய சாவுகள் ஏன்?’ என்கிற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலியானதற்கு தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்து, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில், கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 30-க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அதுபோல, செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூரை அடுத்த, பெருங்கரணை பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒரே நாளில், கள்ளச்சாராயத்திற்கு 11 பேர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இல்லை. தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் நடத்தும் மதுக்கடைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. இதனால் தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் அதிகமாகி ஏராளமான சீரழிவுகள் ஏற்படுகின்றன. விபத்துகளும் அதிகரிக்கின்றன. வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழ்நாட்டில் தான் இளம் விதவைகள் அதிகம் இருக்கின்றனர். இதற்கு அரசே மதுக் கடைகளையும், மதுபான பார்களையும் நடத்துவது தான் காரணம். இவற்றையெல்லாம் எடுத்துக்கூறி முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்தினால், மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் அதிகமாகிவிடும். என்று எப்போதும் ஒரு காரணத்தை கூறுவார்கள்.

ஆனால், இப்போது மதுவிலக்கு அமலில் இல்லாத நிலையில், எங்கும் தாராளமாக மது கிடைக்கும் நிலையில், ஒரே நாளில் இரு இடங்களில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும். ஒரு சில காவல்துறை அதிகாரிகளை மட்டும் தற்காலிக பணி நீக்கம் செய்து தப்பித்து விடலாம் என நினைப்பது தவறு. காவல்துறைக்கு பொறுப்பு வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

அரசே மது பானங்களை விற்கும் நிலையில், கலாச்சாராயம் காய்ச்சி, விற்கப்படுவது ஏன்? டாஸ்மாக் மது கடைகளில் வாங்காமல், கள்ளச்சாராயம் வாங்குவது ஏன் என்பதற்கான காரணங்களை தமிழக அரசு கண்டறிய வேண்டும். இதற்கு வறுமை மிகமிக முக்கிய காரணம். எனவே கிராமங்களில் வறுமையை போக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில சுயநல சக்திகள், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையுடன் கள்ளசாராயம் காய்ச்சுவது போன்ற சட்ட விரோத, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். கள்ளச்சாராயம் காய்ச்சும் சமூக விரோதிகளையும் அவர்களின் பின்னணியில் இருக்கும் அரசியல், அதிகார பலம் கொண்டவர்களை கண்டறிந்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து, தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் இல்லாத வேலையை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ்நாடு மக்களின் அமைதியான வாழ்க்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு துறை தான், டாஸ்மாக் மது கடைகளையும் நடத்துகிறது. அத்துறையின் அமைச்சரான செந்தில் பாலாஜி, டாஸ்மாக் மது கடைகளில் விற்பனையை அதிகப்படுத்துவதில் செலுத்தும் கவனத்தை, கள்ளச்சாராயம் இல்லாத நிலையை உருவாக்குவதிலும் காட்டியிருக்க வேண்டும். மதுவிலக்குத் துறையின் அலட்சியம் பொறுப்பின்மையும் தான் கள்ளச்சாராய விற்பனைக்கு காரணம். எனவே கள்ளச்சாராயத்தை அடியோடு ஒழிக்க மதுவிலக்கு துறை கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மரக்காணம் பகுதியில் கள்ளச் சாராயம் உட்கொண்டதால், சுரேஷ், சங்கர், தரணிவேல் எனும் மூன்று பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், கவலைக்கிடமான நிலையில் 16 பேர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிகிறது. அவர்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். டாஸ்மாக் மூலம் கட்டுப்பாடற்ற சாராய விற்பனை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தற்போது கள்ளச் சாராய விற்பனையும் தலைதூக்கியிருப்பது திமுக அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. உடனடியாக தமிழக அரசு தூக்கத்திலிருந்து விழித்து, கள்ளச் சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று தன் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *