அரசு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு

அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர் சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட சொகுசு வசதிகளை கொண்ட சுமார் 1078 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை 251 வழித்தடங்களில் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்பட்ட நீண்ட தூர பயணம் மேற்கொண்டு வருகின்றன. பெண்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில் ஏற்கனவே இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த இருக்கைகள் தற்போது 4ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெண்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில் ஏற்கனவே இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் நான்கு இருக்கைகள் தற்போது ஒதுக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார். அதன்படி படுக்கை வசதி உள்ள பேருந்தில் நான்கு படுக்கைகளும் , இருக்கை மட்டும் உள்ள பேருந்தில் நான்கு இருக்கைகளும், இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள பேருந்தில் இரண்டு இருக்கை, இரண்டு படுக்கைகளும் பெண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி மூலமாக இதை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பெண்களுக்கான இருக்கைகள் மஞ்சள் நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும். முன்பதிவு செய்யாத பட்சத்தில் மற்ற பயணிகளுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *