அரசு நிலங்களின் குத்தகைகளை ஆய்வு செய்து விவரத்தை இணையத்தில் வெளியிட வேண்டும் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மே.26

தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து, அவற்றின் விவரங்களை ஒரு மாதத்திற்குள் இணையதளத்தில் பதிவேற்ற செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை வடக்கு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 5.90 ஏக்கர் நிலம் பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்துக்கு 1968-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. 25 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்ட இந்த நிலத்துக்கான கெடு 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகையை நிர்ணயித்த அரசு, 36 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வாடகையை செலுத்தாவிட்டால், நில ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என 2015-ம் ஆண்டு மதுரை வடக்கு தாலுகா தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து பாண்டியன் ஹோட்டல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், குத்தகை காலம் முடிந்தபின், அரசு நிர்ணயித்த வாடகையை செலுத்தாமல், 300 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தில், 14 ஆண்டுகள் அனுமதியின்றி ஹோட்டல் நடத்தி அதிக லாபம் அடைந்துள்ளதாகக் கூறி, பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

நிதி நெருக்கடி இருப்பதாக அரசு கூறிவரும் நிலையில், அரசு நிலங்களின் குத்தகைகளை மறுஆய்வு செய்ய வேண்டியது அரசின் கடமை என்றும், ஒரு மாதத்தில் பாண்டியன் ஹோட்டலை அப்புறப்படுத்தி, அரசு நிலத்தை மீட்க வேண்டும் எனவும், வாடகை பாக்கியை கணக்கிட்டு உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வருவாய் நலனை பாதுகாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு சொத்துகள் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிலங்கள் குத்தகை விவரங்களை மாநில, மாவட்ட அளவில் ஒரு மாதத்தில் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வருவாய் துறை செயலாளருக்கும், நில நிர்வாக ஆணையருக்கும் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *