புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 20ஆம் தேதி நடப்பாண்டிற்கான அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் அரசு ஊழியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடந்த 21 ஆம் தேதி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை அரசு ஊழியர்கள் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் தமிழக முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட புதிய பென்ஷன் திட்டம் ரத்து, அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்குவது, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கம் வேண்டும், இடைநிலை, முதுநிலை ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர். அரசு ஊழியர்களின் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தால் கோவை மாவட்ட அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.