அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக மே.27ல் ஆர்ப்பாட்டம் – புதிய தமிழகம் கட்சி அறிவிப்பு

மே.21

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மே 27ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெருங்கருணை மற்றும் இ.கே.ஆர்.குப்பம் கிராமத்தை சேர்ந்த 22 பேர் மது அருந்தி உயிரிழந்துள்ளனர். இதனை உயிரிழந்தவர்களின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்னிடம் முறையிட்டனர்.

மீனவர்கள் வசிக்கின்ற அந்த கிராமத்தைச் சார்ந்தவர்கள் மது விற்பனை செய்யக்கூடாது என்று இருந்தாலும், அரசியல் பின்புலத்தோடு காவல்துறை துணையோடு அந்த பகுதி மக்களுக்கு வேறு கிராமத்தாரால் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாகத்தான் அங்குள்ள பல்வேறு இளைஞர்கள் மது பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். டாஸ்மாக் மற்றும் அதற்கு இணையாக விற்பனை செய்யப்படும் மது குறித்து பல தகவல் வெளிவர துவங்கியுள்ளது. சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் இரவு 10 மணிக்கு பிறகும் விடிய விடிய மது விற்பனை நடைபெற்று கொண்டுள்ளது.

செந்தில் பாலாஜி நான் சொல்லக்கூடிய புள்ளிவிவரம் தவறு என்றார். ஆனால், நான் கூறிய பல லட்சம் கோடி ஊழல் நடைபெறுகிறது என்பதற்கு ஆதாரமாகதான் இகேஆர் குப்பம் சம்பவம் வெளிப்படுத்துகிறது. 22 பேர் உயிரிழந்த நிலையிலும்கூட, தற்போது வரை எந்த அமைச்சரும் அந்த கிராமத்திற்கு சென்று மக்களை சந்திக்கவில்லை. துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் பார்க்கவில்லை. 22 பேர் மரணத்திற்கு செந்தில் பாலாஜி பொறுப்பேற்று அவர் பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால் அவர் விலகவில்லை.

விதிமுறைகளுக்கு மாறாக தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் ரத்தமும் வியர்வையும் சுரண்டப்படுகின்ற சூழல் இருந்தும் கூட இந்த அமைச்சர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏற்புடையது அல்ல. உச்சநீதிமன்றம் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது பல பணியிடங்களுக்கு பணம் பெற்றார் என தெரிவித்தும் கூட செந்தில்பாலாஜி பதவி விலகவில்லை.

செந்தில்பாலாஜியைக் கண்டித்தும், அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வரும் மே 27 ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சட்ட விரோத மது விற்பனையை தடுக்க வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறும்.

அறுக்க தெரியாதவரிடம் ரெண்டு அறிவாள் என்பார்கள். அதுபோல் செந்தில்பாலாஜியிடம் 2 துறை கொடுக்கப்பட்டுள்ளது. எந்த கட்சிக்கு சென்றால் பதவி இருக்குமோ அங்கு ஓடிவிடும் ஓடுகாலிபோல் மாறி மாறிச் செல்பவர் செந்தில்பாலாஜி. மின்துறையை சரியாக கவனிக்காததால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின் வெட்டும் உள்ளது. எனவே செந்தில் பாலாஜியே பதவி விலக வேண்டும்.

மேலும் செந்தில் பாலாஜி கரூரில் ஜெயித்தவர். கரூருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. 44,000 கோடி வருமானம் கொடுக்ககூடிய டாஸ்மாக் நிறுவனத்தால் நட்ட கணக்கு காட்டப்படுகிறது. விற்பனையில் வெளிப்படையில்லை. பாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக வாங்குவதற்கு செந்தில்பாலாஜி விளக்கம் கொடுக்க வேண்டும். வருமான வரித்துறை 150 கோடி ரூபாய் டாஸ்மாக் மீது அபராதம் போட்டுள்ளது. மத்திய அரசு இதனை விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *