June 05, 2023
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் நேற்று நள்ளிரவில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அப்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்துமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில்தான் மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் பெற்ற ஒலிம்பிக் விருது உள்ளிட்ட சர்வதேச விருதுகளை கங்கையில் வீசி எறிவதாக அறிவித்து விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திக்கத் கோரிக்கையை ஏற்று அந்தப் போராட்டத்தைக் கைவிட்டிருந்தனர். அப்போது அரசுக்கு அவர்கள் ஐந்து நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில்தான் மல்யுத்த வீராங்கனைகள் நள்ளிரவில் அமித் ஷாவை சந்தித்துள்ளனர். பிரிஜ் பூஷன் மீது விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சரிடம் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கிய பின்னர் நடந்த முதல் மேல்மட்ட சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
புகாரும் போராட்டமும்: தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பரபரப்பை ஏற்படுத்திவரும் சம்பவமாக மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் அமைந்துள்ளது. இப்போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவளித்து வருவதாலும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஆளும் பாஜக எம்பியாக இருப்பதாலும் இப்போராட்டம் விவாதத்துக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரை கைது செய்யக் கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ்போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் போாரட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 28-ம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இவர்களை போலீஸார் கைது செய்தனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரங்கள் எல்லாம் அகற்றப்பட்டன. இதையடுத்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் நேற்று மாலை 6 மணியளவில் வீசுவோம் என சாக்சி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் ட்விட்டரில் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச திங்கள்கிழமை மாலை ஹரித்துவார் வந்தனர். கண்ணீருடன் கங்கைக் கரைக்கு சென்ற அவர்களை, உள்ளூர் மக்களும், விவசாய சங்கத்தினரும் சமாதானப்படுத்தினர்.
பல ஆண்டு கடின உழைப்புக்கு பின்வாங்கிய பதக்கங்களை கங்கையில் வீசினால், 2 ஒலிம்பிக் பதக்கங்களையும், காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற பல பதக்கங்களையும் நாடு இழக்கவேண்டியிருக்கும். அதனால் பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை மல்யுத்த வீராங்கனைகள் நிறுத்தினர். மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அவர்கள் 5 நாள் கெடு விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.