June 05, 23
ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச பள்ளிக் கல்வியை வழங்குவதாக தொழிலதிபர் கவுதம் அதானி நேற்று அறிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: நாட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மிக மோசமான, கவலையளிக்கும் ரயில் விபத்தாக ஒடிசா சம்பவம் அமைந்துவிட்டது. ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பள்ளிக் கல்வியை அதானி குழுமம் கவனித்துக் கொள்ளும். இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதும், குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதும் நமது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். இவ்வாறு கவுதம் அதானி தெரிவித்துள்ளார். இதேப்போல ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்க முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் முன்வந்துள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, டெல்லி குருகிராமில் உள்ள சேவாக் சர்வதேச பள்ளியில் இலவச கல்வி அளிக்கப்படும் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் அறிவித்துள்ளார்.