அடுத்தடுத்து சர்ச்சை.. கேரளா வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு.. அலறிய பயணிகள்!

கேரளாவில் வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்துள்ளது.

கேரளாவில் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தரமான வசதிகளுடன் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே அதிக கட்டணத்தை கொடுத்து வந்தே பாரத் ரயிலில் மக்கள் பயணிக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, இதுபோன்ற செயல்களை எப்படி சகித்துக் கொள்வது என பயணிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்தியா முழுவதும் பல முக்கிய நகரங்களில் வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. கேரளாவில் திருவனந்தபுரம் டூ காசர்கோடு, தமிழகத்தில் சென்னை டூ மைசூர், சென்னை டூ கோவை ஆகிய மார்க்கங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஏசி வசதி, சொகுசு இருக்கைகள், வைஃபை, பயோ கழிவறைகள், ரயிலுக்கு உள்ளேயே உணவு கிடைப்பது, வேகமாக செல்வது போன்ற காரணங்களால் வந்தே பாரத் ரயில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

அதே சமயத்தில், சில வந்தே பாரத் ரயில்களில் நடைபெறும் சம்பவங்கள் மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு கூட, திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை சென்ற வந்தே பாரத் ரயிலில் மழை நீர் ஒழுகியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல, ஏற்கனவே குறிப்பிட்ட வேகத்தை விட குறைந்த வேகத்தில் செல்வது, மாடுகள் மீது மோதி ரயில்கள் சேதம் அடைவது என அடுத்தடுத்த சர்ச்சைகளில் வந்தே பாரத் ரயில்கள் சிக்கி வருகின்றன.

அந்த வகையில், நேற்றும் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறது. திருவனநந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை சென்ற வந்தே பாரத் ரயிலில் இ-1 பெட்டியில் பயணித்தவர்களுக்கு பரோட்டா வழங்கப்பட்டது. இதில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழுக்கள் இருந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பயணி, காசர்கோடு வந்ததும், இதுதொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து, பாலக்காடு ரயில்வே கோட்டத்திற்கு தகவல் கொடுத்த அதிகாரிகள், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். இந்த சூழலில், ரயிலில் வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்ததை பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *