தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, உச்ச நடிகர்களின் படங்களில் நடித்து வந்தாலும், இடையில் ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
யோகி பாபு நடித்துள்ள கஜானா படத்தின் விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ராஜா, ரூ.7 லட்சம் தந்தால் தான் யோகிபாபு படத்தின் புரோமோஷன் விழாவுக்கு வருவதாக சொல்கிறார். அதனால் தான் இப்போது வரவில்லை. இவர் நடிகனாக இருக்கவே லாயக்கு இல்லை’ என்று விமர்சனம் செய்தார்.
இந்த பேச்சு பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜோரா கைய தட்டுங்க’ பட விழாவில் அவர் கலந்துகொண்டார்.
கஜானா பட தயாரிப்பாளர் ராஜா சுமத்திய குற்றச்சாட்டுக்கு தனது வேதனையையும் தெரிவித்துள்ளார்.
விழாவில் பேசிய யோகிபாபு “ஒரு பட விழாவுக்கு நான் வராததால் யார் யாரோ, எப்படி எப்படியோ பேசுகிறார்கள்.
என்னிடம் உதவியாளராக இருந்தவர் படம் எடுக்கிறாரே என்று, அவர் கேட்டுக்கொண்டதால் வெறும் 2 நாட்கள் நடித்துக்கொடுத்தேன். அந்த பட விழாவிற்கு நான் வராததால் காசு கேட்டதாக பேசுகிறார்கள். ஆனால் இது என் படம். அதனால் நான் வந்தேன். இந்த உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
எனக்கு எவ்வளவு பேர் பணம் தர வேண்டும் என்பது தெரியுமா? பட்டியல் தரட்டுமா? எதையுமே அவசரப்பட்டு பேசி விடாதீர்கள்.
என்னை பேசுபவர்கள், பேசிக்கொள்ளட்டும். அவர்களை கடவுள் பார்த்துக்கொள்வார். எனது சம்பளத்தை நான் தீர்மானிப்பது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் எனது சம்பளம் என்ன என்று கூட எனக்கு தெரியாது. வெளியே தான் தீர்மானிக்கிறார்கள். ‘ என்று யோகிபாபு கூறியுள்ளார்