டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் புதிய படத்தில், சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இது சிம்புவுக்கு 49- வது படம். ஹரீஷ் கல்யாண், இந்துஜா நடிப்பில் ஹிட்டான ‘பார்க்கிங்’ என்ற படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
கல்லூரியை கதை களமாக கொண்ட கமர்ஷியல் படம். இதில், நீண்ட இடைவெளிக்கு பிறகு கல்லூரி மாணவனாக சிம்பு நடிக்கிறார். சிம்பு மூலம் திரை உலகில் காமெடி நடிகராக அறிமுகமான சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். எனினும், சிம்புவுக்காக இந்த படத்தில் சந்தானம் மீண்டும் காமெடி வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
கடைசியாக சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சந்தானம் நடித்திருந்தார். சந்தானம் ஹீரோவாக நடித்திருந்த ‘சக்க போடு போடு ராஜா’ என்ற படத்துக்கு சிம்பு இசை அமைத்திருந்தார். ‘டிராகன்’ என்ற ஒரே படத்தின் மூலம் பிரபலமான கயாடு ேலாஹர், சிம்பு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கிறார்.
ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் , மீண்டும் தனது படத்தில் காமெடி கேரக்டரில் நடிப்பது குறித்து சிம்புவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு ‘இப்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது –சந்தானம் போன்ற நடிகர்கள் ஹீரோவாக மட்டும் இருக்கக்கூடாது என நினைத்தேன் –அதனால்தான் எனது 49 –வது படத்தில் நடிக்க அழைத்தேன் –அவரும் பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டார்’ என்றார், சிம்பு.
—