தி டிப்ளோமேட்.
திருமணம் என்கிற பெயரால் ஏமாற்றப்பட்டு பாகிஸ்தானுக்குள் சிக்கிக் கொள்கிறார் ஓர் இந்தியப் பெண்.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் டெபுடி ஹைகமிஷனரான J.P. சிங் அந்தப் பெண்ணை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதுதான் படம்.
நெட்பிளிக்ஸ் டைமிங்கில் இறக்கியிருக்கிறத அல்லது தற்செயலோ என்று தெரியவில்லை. படம் விறுவிறுப்பாகவும் நெகிழ்வாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது.
உயர்பொறுப்பில் உள்ள ஓர் அதிகாரி, தனது அதிகாரத்தை நோ்மையாகவும் மனிதாபிமானத்தோடும் துணிச்சலோடும் பயன்படுத்தினால் ஓர் அப்பாவியை எப்படி ஒரு சிக்கலில் இருந்து வெளியே கொண்டு வர முடியும் என்பது சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
தூதரக அதிகாரியாக ஜான் ஆப்ரஹாம் நன்றாக நடித்திருக்கிறார்.
“என்னை வெளியே அனுப்பிடாதீங்க. கொன்னுடுவாங்க” என்று அபயம் கேட்டு வரும் பெண்ணை ஆரம்பத்தில் சந்தேகத்துடனும் இறுக்கத்துடனும் அணுகுவது.. பிறகு மெல்ல அவள் தரப்பு நியாயம் புரிந்தவுடன் அனுசரணையாக மாறுவது என்று அவரது கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு்ள்ளது.
தூதரக பதவி என்பது எத்தனை ஆபத்தானது, நெருப்பிற்கு இடையே நின்று ஆடும் நடனம் போன்றது என்பது வலுவான காட்சிகளின் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது.
அதிலும் இந்தியா – பாகிஸ்தான் போன்ற சிக்கலான உறவைக் கொண்ட நாடுகள், தங்களின் இமேஜ் சார்ந்த விஷயங்களை எப்படி அணுகும் என்பது யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் உண்மைச் சம்பவத்தின் மீது அமைக்கப்பட்டது.
இந்தியப் பெண்ணை மீட்பதற்கு (அப்போது) வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் எடுக்கும் முயற்சிகள் சிறப்பாகச் சித்தரி்க்கப்பட்டிருந்தன. இந்தப் பாத்திரத்தை நம்பகத்தன்மையுடன் நடித்திருந்தார் ரேவதி.
ராணுவ அரசாங்கத்தைக் கொண்டிருந்தாலும் பாகிஸ்தானில் நீதித்துறை முற்றிலும் செயலிழந்து விடவில்லை என்பது நீதிமன்றக் காட்சிகளின் மூலம் புலப்படுகிறது.
நைச்சியமாக ஏமாற்றி பாகிஸ்தானுக்கு வரவழைத்த மோசக்காரன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்கிறான். அங்கிருந்து தப்புவதற்காக அந்தப் பெண் சொல்லும் காரணம் புத்திசாலித்தனமானது.
ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்சினை மீடியாவிற்கு வந்து தூதரக அதிகாரிக்கு சிக்கல் ஏற்படுகிறது.
“நீ நீதிமன்றத்திற்கு வந்து கணவன் என்று ஏமாற்றியவனின் முன்னால் சாட்சி சொல்லித்தான் ஆக வேண்டும்” என்று தூதரக அதிகாரி சொல்ல
“அவனுடைய கண்களை என்னால் நேருக்கு நேர் பார்க்க முடியாது. ஒரு பெண்ணால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்” என்று அதற்கான காரணங்களை அந்தப் பெண் சொல்லும் காட்சி நெகிழ்வானது.
சேஸிஸ் காட்சி பார்வையாளர்களுக்கு பதட்டமூட்டு்ம் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. ‘அந்தப் பெண் எப்படியாவது தப்பித்து விட வேண்டுமே’ என்று அத்தனை திகிலாக இருக்கிறது.
வாகா எல்லையைக் கடக்கும் காட்சியும் ‘வா மகளே’ என்று ரேவதி பாத்திரம் வந்து அழைத்துச் செல்வதும் பின்னணி இசையும் நெகிழ்வூட்டுகிறது.
இறுதியில் அசலான நபர்களும் அதன் ஃபுட்டேஜூம் காட்டப்படுகிறது. ஜே.பி. சிங் என்கிற அந்த துணிச்சலான ஆசாமியை வணங்கத் தோன்றுகிறது.