அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.
மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் வெளியிட்டது.
மே – 1 ஆம் தேதி சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்துடன் வெளியான இந்த படம் ஆரம்ப நாட்களில் கவனிக்கப்படவில்லை
ஊடகங்கள் , நல்ல படியாக விமர்சனம் எழுதியதால், தியேட்டர்களில் மக்கள் வெள்ளம் சூழ்ந்தது.
வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தமிழகத்தில் ரூ.50 கோடி வசூலை கடந்துவிட்டது.
கேரளா, கர்நாடகா மட்டுமன்றி அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. விரைவில் இப்படம் ஜப்பானிலும் வெளியாகிறது.
படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சசிகுமாரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.இது குறித்து சசிகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது :
‘படம் சூப்பர் என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்துக்கு சொல்லவா வேண்டும்.
‘தர்மத்துக்காக வாழ்ந்திருக்கீங்க. சொல்ல வார்த்தையே இல்ல. அந்த அளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க. சமீபகாலமா உங்களோட கதைத் தேர்வு வியக்க வைக்குது சசிகுமார்’ என சூப்பர்ஸ்டார் சொல்லச் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை’என சசிகுமார் பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார்
—