ரசிகனின் கருத்து…
தமிழில் வரும் பல தரமான அறிமுக இயக்குநர்களால் தமிழ் சினிமாவும் உலக அளவிற்கு உயர்ந்து வருகிறது. தற்போது அந்த வரிசையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் இணைந்து உள்ளது.
24 வயது அறிமுக இயக்குநர் அபிஷன் விஜேத் இயக்கி வெளியாகியுள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. திரையரங்கு எண்ணிக்கையும் இதனால் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், குமரவேல் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் உட்படப் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி மூன்றாவது நாள் வசூல்:
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அளவில் ரூ. 2 கோடி நிகர வசூல் ஈட்டியது. பட வசூல் குறித்தான தகவல்களை வெளியிடும் sacnilk இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம், இரண்டாவது நாளில் ரூ.1.70 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் இது முதல் நாள் வசூலை விட 15 விழுக்காடு குறைவு. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 3ஆவது நாளைப் பொறுத்தவரை, பாக்ஸ் ஆபிஸில் ரூ.2.50 கோடி இந்தியளவில் பெற்றுள்ளது. இதன்மூலம், ரூ.6.20 கோடி, மூன்று நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பெற்றுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 78% அரங்கம் நிறைந்த காட்சிகளுடனும், மதுரையில் 56.50% அரங்கம் நிறைந்த காட்சிகளுடனும், புதுச்சேரியைப்பொறுத்தவரை 98.25% அரங்கம் நிறைந்த காட்சிகளுடனும் மே 3ஆம் தேதியான நேற்று ஓடியிருக்கிறது.
படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான விமர்சனங்கள் இனி வரும் நாட்களில் வசூலை அதிகரிக்க உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் பிளஸ் பாயின்ட்:
இப்படத்தினை 24 வயதே ஆன அறிமுக இயக்குநர் அபிஷன் விஜேத் இயக்கியுள்ளார். இது அவரது அறிமுகப்படம் என நம்ப முடியாத அளவிற்கு அனைத்துக் காட்சிகளும் நேர்த்தியாகவும் ரசிக்கும்படியாகவும் வந்துள்ளதாகப் பாராட்டப்பட்டு வருகிறது. படத்தில் குறைவான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு நடிகர்கள் தேர்வே மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. மேலும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில், ஹீரோ சசி குமார் குடும்பம் முழுக்க முழுக்க, ஈழத்தமிழில் பேசியிருப்பது பலரையும் ஈர்த்திருக்கிறது. தெனாலி கமல்ஹாசனுக்கு பின், ஈழத்தமிழ் பேசி நடித்த ஹீரோவாக சசி குமார் பார்க்கப்படுகிறார்.
டூரிஸ்ட் ஃபேமிலி கதை என்ன?
இலங்கையில் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பம் ஒன்று ஒருநாள் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் எப்படி தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதிக்குள் வருகிறார்கள். அப்படி வந்தவர்கள் சந்திக்கும் பிரச்னை என்ன? அவர்கள் அதை சமாளித்தார்களா? என்பதை உணர்வுப்பூர்வமாக அதே சமயத்தில் காமெடியாக கொண்டுசென்றிருக்கிறார் இயக்குநர்.
மேலும் சிம்ரன், சசி குமார் மற்றும் அவர்களது மகனாக நடித்துள்ள சிறுவன் கமலேஷ் என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது படத்தினை வெற்றி அடைய உதவியுள்ளது என்றே கூறலாம்.
இந்தப் படத்தை குட் நைட், லவ்வர் போன்ற வாழ்வின் எதார்த்த படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
நடிகர்களைத் தவிர, இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பது இசை தான். அதுவும் படத்தின் அறிமுக பாடலின் மூலமே மனதை லேசாக வைத்திருக்கிறார், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். கதையை வழிநடத்திக் கொண்டு போகும் இவரது இசை அதன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறது. பட்ஜெட் குறைவான படமாக இருந்தாலும் நல்ல வசூலை டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பெற வாய்ப்புள்ளது.