சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் இந்த படம் இன்று திரைக்கு வந்துள்ள நிலையில் ஒரு சிக்கல் ஏற்பட்டது.
இப்படத்தில்,இடம் பெறும், ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பாடலில், திருப்பதி வெங்கடாஜலபதியை இழிவுப்படுத்தும் வகையில் வரிகள் உள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில்
பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பாலாஜி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
‘மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் பாடலில் வரிகள் உள்ளன. எனவே, இந்த பாடலுடன் படத்தை, வெளியிட தடை விதிக்க வேண்டும்’என அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜரானார்.
”படத்தில் இருந்து ஆட்சேபத்துக்கு உரிய பாடல் வரிகள் நீக்கப்பட்டு உள்ளன.-பாடல் மாற்றி அமைக்கப்பட்டு, புதிதாக தணிக்கை சான்று பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது,” என்று அவர் கூறினார்.
மனுதாரர் தரப்பில், பாடல் டியூன் இன்னும் பயன்படுத்தப்படுகிறது – சமூக வலைதளங்களில் பாடல் உள்ளது என்று கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘இதுபோல டியூன் பயன்படுத்த வேண்டும் என எவ்வாறு தோன்றியது? மற்ற மதங்களை பற்றி, இப்படி பாடலில் பயன்படுத்த தைரியம் உள்ளதா? எந்த மதத்துக்கும் அவதுாறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது’ என்று கூறி, பாடலில் இடம்பெறும் கோவிந்தா, கோவிந்தா எனும் ‘டியூனை மியூட்’ செய்வது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி, பட தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிவுறுத்தினர்.
அதன்படி, பாடலில் வரும், இந்த டியூனை கேட்க முடியாதபடி, ‘மியூட்’ செய்யப்பட்டு விட்டதாக,படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள்,
சந்தானம் படத்தை இன்று வெளியிட அனுமதித்தனர்.
இதனால் படக்குழுவும், சந்தானமும் நிம்மதி அடைந்துள்ளனர்.
–
–
—