‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை, நம்ம ஊர் அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் இதை தயாரிக்கிறது. ஷாருக்கானின் ஜவான் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படம், இது.
“சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில், தயாராகிறது” என படக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இந்தப் படத்தின் போட்டோ ஷூட் மும்பை பாந்த்ராவில் உள்ள மெகபூப் ஸ்டூடியோவில் நடந்தது. ஜூன் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது..
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன் படம் குறித்து கூறியதாவது:
“ஜவான் மற்றும் தென்னிந்தியாவில் சில வெற்றிப் படங்களை இயக்கி இருக்கிற அட்லியுடன் இதில் இணைகிறேன். அவர் சொன்ன ஐடியாவும் அவருடைய நம்பிக்கையும் எனக்குப் பிடித்திருந்தது.
பல நிலைகளில் நாங்கள் ஒரேமாதிரியான எண்ணம் கொண்டவர்கள். இந்தப் படம், இந்திய சினிமாவுக்கு புதிய விஷுவல் ட்ரீட்டை கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய உணர்வுகளுடன் கூடிய சர்வதேச திரைப்படமாக இது இருக்கும்’என்று அல்லு அர்ஜுன் தெரிவித்தார்.
—