June 01, 2023
போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக தொழிற்சங்களுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் மாநகர பேருந்துகளை நிறுத்தி விட்டு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் அவதியடைந்தனர். இந்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்தார்.
இதனையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அரங்கில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இணை ஆணையர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து சிஐடியு தொழிற்சங்க பொதுச்செயலாளர் சௌந்தரராஜன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 9-ம் தேதி நடைபெற இருப்பதாகவும் கூறினார். வாக்குறுதியை மீறி ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமித்தால், ஏற்கனவே அறிவித்தப்படி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.